TAMIL
காலனிய காலந்தொட்டே, இந்திய நாடக அரங்கைச் சேர்ந்தவர்கள் இந்தியாவின் பன்முகத்தன்மையை தங்கள் நாடகங்கள் மூலம் கொண்டாடி வந்திருக்கிறார்கள். சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதியாக நாங்கள் நாடகங்கள் மூலமாக சமர் புரிந்திருக்கிறோம்.  சமூகத் தீமைகளை எங்கள் கலை கொண்டு எதிர்த்திருக்கிறோம். சமூக சமத்துவத்துக்காகவும் அனைவரையும் உள்ளடக்கி அரவணைத்துச் செல்லும் தன்மைக்காகவும் நின்றிருக்கிறோம். ஆணாதிக்கத்தையும் பார்ப்பனியத்தையும் சாதிய ஒடுக்குமுறையையும் எதிர்த்து நின்றிருக்கிறோம். மதப் பிரிவினைவாதம், ஆதிக்கம், குறுகிய மனப்பான்மை, பகுத்தறிவுக்கு புறம்பானவை என அனைத்துக்கும் எதிராக நின்ற நீண்ட நெடிய பெருமைமிகு மரபு அரங்கக் கலைஞர்களுக்கு உண்டு.  விளிம்பு நிலையிலிருந்து பேசியிருக்கிறோம்; விளிம்புநிலை குறித்து பேசியிருக்கிறோம். இசையுடனும் நடனத்துடனும், நகைச்சுவையுடனும் சோகத்துடனும், பல்வேறு மனிதர்களின் ஈர்க்கும் கதைகளுடனும், நூற்றி ஐம்பது ஆண்டுகளாக ஒரு மதச்சார்பற்ற , ஜனநாயக இந்தியாவை , அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமத்துவ இந்தியாவை கற்பனை செய்து வந்திருக்கிறோம்.

இன்று, இந்தியா என்கிற கருத்தாக்கத்திற்கே அச்சுறுத்தல் எழுந்துள்ளது.  இன்று, இசை, நடனம், சிரிப்பு என அனைத்துமே அச்சுறுத்தலின்கீழ் உள்ளன. இன்று, நேசத்துக்குரிய நம் அரசியல் சாசனத்திற்கு அச்சுறுத்தல் உள்ளது.  வாதத்தையும் விவாதத்தையும் மாற்றுக்கருத்தையும் வளர்த்தெடுக்கவேண்டிய நிறுவனங்கள் இன்று கடுமையாக ஒடுக்கப்பட்டிருக்கின்றன. கேள்வி கேட்டால், பொய்களுக்கெதிராக உரத்துக் குரலெழுப்பினால், உண்மையைப் பேசினால், அவர் ‘தேசத்துரோகி’ என்று முத்திரை குத்தப்படுகிறார்.  வெறுப்பின் விதைகள் நம் உணவிலும் பிரார்த்தனைகளிலும் பண்டிகைகளிலும் நுழைந்துவிட்டன.

இந்த வெறுப்பு நம் அன்றாடங்களில் ஊடுருவியிருக்கும் பாதைகள் ஆபத்தானவை. ஆகவே இந்த ஊடுருவல் தடுத்து நிறுத்தப்படவேண்டும்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல்தான் சுதந்திர இந்தியாவின் மிக முக்கியமான திருப்புமுனையாக இருக்கப்போகிறது என்பதில் ஐயம் இல்லை. வலு குறைந்தவற்றுக்கு, மிகவும் விளிம்புநிலையில் உள்ளவற்றுக்கு அதிகாரம் வழங்கவேண்டும் என்பதே ஜனநாயகம். கேள்வியே கேட்காமல், விவாதமே இல்லாமல், வலுவானதொரு எதிர்ப்பும் இல்லாமல் ஒரு ஜனநாயகம் செயல்பட முடியாது. இவை அனைத்தும் ஒருமுகமாக தற்போதைய அரசால் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருகின்றன.  வளர்ச்சிக்கு வாக்குறுதி தந்து ஐந்தாண்டுகளுக்கு முன்னால் ஆட்சிக்கு வந்த பாரதிய ஜனதா கட்சி, எந்த வித கட்டுப்பாடுமில்லாமல் இந்துத்துவ அடியாட்கள் வெறுப்பரசியலிலும், வன்முறையிலும் ஈடுபட சுதந்திரம் அளித்துள்ளது. ஐந்தாண்டுகளுக்கு முன்னால் எந்த மனிதர் தேசத்தின் பாதுகாவலராகச் சித்தரிக்கப்பட்டாரோ, அவரே தனது கொள்கைகளால் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களை அழித்தவர். கருப்புப் பணத்தை மீட்பதாக வாக்குறுதி அளித்தார்; அதற்குப் பதிலாக அயோக்கியர்கள் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு நாட்டைவிட்டு தப்பியோடியதே நடந்தது. ஏழைகள் மேலும் ஏழைகளாகிக் கொண்டிருக்கும்போது, செல்வந்தர்களின் சொத்தோ வானளாவ வளர்ந்துகொண்டிருக்கிறது.

இந்தியாவில் அரங்கம் பயிலும் நாங்கள், நம் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கவும், வெவ்வேறு விதமான, மதச்சார்பற்ற நமது பண்பாட்டைப் பாதுகாக்கவும் இந்திய மக்களுக்கு ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறோம்.  அன்புக்கும் பரிவுக்கும், சமத்துவத்துக்கும் சமூகநீதிக்கும் வாக்களித்து இருளுக்கு வழிவகுக்கும் காட்டுமிராண்டித்தனமான சக்திகளை தோற்கடிக்கவேண்டுமாய் சக குடிமக்களை கேட்டுக்கொள்கிறோம்.

எங்கள் வேண்டுகோள் -  உங்கள் வாக்குகள் மூலம்,  சகிப்பின்மையையும் வெறுப்பையும் அக்கறையின்மையையும்   அரச அதிகாரத்திலிருந்து வெளியேற்றுங்கள். பா.ஜ.கவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் எதிராக வாக்களியுங்கள்.  வலுகுறைந்தவர்களை அதிகாரமிக்கவர்களாக மாற்றவும், சுதந்திரத்தைப் பேணிக்காக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும் வாக்களியுங்கள். மதச்சார்பற்ற இந்தியாவுக்காக, ஜனநாயக இந்தியாவுக்காக, அனைவரையும் உள்ளடக்கி அரவணைக்கும் இந்தியாவுக்காக வாக்களியுங்கள். கனவு காணும் சுதந்திரத்துக்காக வாக்களியுங்கள்.  புத்திசாலித்தனமாக வாக்களியுங்கள்.


Are you a theatre artist? Like to endorse the statement?
Name and Place:

Your Email: (required)

Your theatre credentials and other details : (required)